Thursday, March 26, 2009

தேரடிவீதியில்……..

வருடத்திற்கொருமுறை மட்டுமே
வந்துபோகும் எங்க ஊர் திருவிழா தான் இன்று!
இந்த திருவிழா மட்டும் ஏனோ
ஒரு இனம் புரியாத இன்பத்தை தந்தது!

கதிரவன் கூடவே நானும் எழுந்து
குளித்து உடுத்தி உடனே சென்றேன்
கோவிலை நோக்கி!

வழியில் இருந்த பிள்ளையாருக்கு
ஒரு வணக்கம் போட்டுவிட்டு
உள்ளே இருந்த பெருமாளுக்கும்
ஒரு சல்யூட் போட்டுவிட்டு கடைத்தெரு
வழியில் வலம் வந்தேன்.

பட்டாணி கடைகளும்
வளையல் கடைகளும்
வரிசையாய் அணிவகுக்க !

குழந்தைகள் பலூன்களுடன்
குதித்தோட !-அவனவன்
அத்தை பெண்களுடன் கொஞ்சி குலாவிட !

அர்ச்கர்கள் ஓதும் மந்திரங்களுடன்
அல்வா கடையில் பாடும் ‘ஓ’போடு
பாடலும் சேர்ந்து ஒலிக்க!

இமயமலைக்கு தோரணம் கட்டியது போல்
தேர் நிற்க -அங்குதான் அதே தேரடிவீதியில் தான்
கேட்டேன் அந்த கொலுசொலியை!

வான்வெளியில் வண்ண வண்ண
தீ பூக்களை இரைத்து விட்டு
டமால்’ எனும் வெற்றி ஓலததின்
சத்தத் தின் மத்தியில் தான் கேட்டேன்
அந்த ஒலியை!

உயரமான ராட்டினம் கூட்டம்
நிரம்பி சுற்ற!-என்
விழிகள் மட்டும் ஒலி
வந்த திசையை சுற்ற!
கண்டேன் அந்த கொலுசொலி யை
அதை அணிந்தவளையும் தான்.

அவள் !
பெண் அல்ல!
தேவதை. ஒரு வேலை தேவலோகத்தில்
வேலை பார்த்தது போதும் என்று வீ.ஆர்.எஸ்
வாங்கிக்கொண்டு பூமி வந்திருப்பாளோ!

வெண்ணிலவில் வெண் முத்துக்களா?
அவள் முகத்தின் வியர்வை துளிகள்!
அவள் சிரித்தாள்.அட
மின்னல் கூட அதன் ஒளியை
அவளிடம் தான் கடன் வாங்கியிருக்குமா?

அவள் கூந்தல் அழகை
கண்டால் குற்றாலம் கூட
குனிந்து கொல்லும்!

அவளையே பார்த்து கொண்டிருந்தேன்!
நேரம் திருவிழாவை தொலைத்து கொண்டிருக்க
நானோ தொலைத்து கொண்டிருந்தேன்
என் இதயத்தை அவளிடம்!

மறுநாள் அதிகாலை
அதே தேரடி வீதியில்
சிறுவர்கள் சிதறிக்கிடந்த குப்பைகளில் னி
சில்லறைகளை தேடி கொண்டிருக்க!
நானும் தேடிக்கொண்டிருந்தேன்
சில்லறைகளை அல்ல!
நேற்றிரவு தொலைந்து போன
என் இதயத்தை!

No comments: