Saturday, April 25, 2009

16.07.2004 !

16.07.2004
அன்றைய தினம் மட்டும்
ஏனோ விடிந்தவுடன்
இருண்டு விட்டது.
அனல் அரக்கனின்
அசுர செயலால் தான்!

நீர் சுனாமி வரும் முன்பே
வந்து விட்டது அன்று இந்த
தீ சுனாமி!

இன்றைய குழந்தைகள்
வருங்கால இந்தியாவின் தூண்கள்
என்றாரே நேரு.
அந்த தூண்களில் இரு நாற்பதிற்கும் மேல்
இன்று இடிந்து விட்டதே!

கனவுகள் காணுங்கள்
என்றாரே அண்ணல் அப்துல்கலாம்.
அவரின் அக்னி சிறகுகள்
94 ஐ இன்று அக்னியே தின்றதே !

கண்டிருப்பரே
என் தம்பிகளும் தங்கைகளும்
ஆயிரமாயிரம் கனவுகள்
மருத்துவர்களாக,பொறியாளர்களாக
ஆசிரியர்களாக ,அகிலம் போற்றும்
தலைவர்களாக,
ஐயகோ , கனவுகள் அனைத்தும்
அனலில் நனைந்து கருகி போனதே!

புள்ளி வைத்த கோலம்
புழுதியிலே கலைந்தது போல்
என் இளவல்களின் வாழ்க்கை அது
கோணலாய் போனதாலே
கும்பகோணம் இனி கும்பகோணல்
என மாறட்டுமே!

முனிவனாய் நானிருந்தால்
என் உயிர் கொடுத்து குழந்தைகள்
உயிர் மீட்க வரம் ஒன்றை கேட்டிருப்பேன்
மன்னியுங்கள் என்னை நீங்கள்
வெறும் மனிதனாய் போனதாலே!

மலர்களுக்கு அஞ்சலி செய்ய
வெண்ணிற மலர்களை
குவித்து வைத்தேன்.
என் கண்ணீர் பட்டு அவை சிவந்ததாலே
பிஞ்சிகளின் பாதங்களில்
என் நெஞ்சத்தை வைக்கிறேன்!

No comments: