Saturday, August 18, 2012

நோக்கியா 6600


          அதிகாலை . சரியாக மணி ஐந்தை தொட்டதும் சிவாவின் நோக்கியா 6600 அலறத் தொடங்கியது . " அடடா அடடா அடை மழை டா ! அழகா சிரிச்சா அடை மழை டா! " அடடா அடடா அடை மழை டா ! அழகா சிரிச்சா அடை மழை டா! "நேற்று நடு இரவு வரை கண் விழித்து டாக்குமென்ட் வொர்க்கெல்லாம் முடிச்சிட்டு சோர்வாய் தூங்கின சிவா, கோபத்தோடு செல்லை எடுத்து அலாரத்தை ஹாப் செய்துவிட்டு படுக்கையை விட்டு எழுந்து அடுத்தப் பணிக்கு ஆயத்தமானான்.

                 மணி 8.00. ஹோட்டல்  வசந்தபவன். முதல் இட்லியை முடித்துவிட்டு இரண்டாவதை பிடத் தொடங்கியபோது அவனின் நோக்கியா 6600 அலறியது.  " அடடா அடடா அடை மழை டா ! அழகா சிரிச்சா அடை மழை டா! " வலது பேன்ட் பாக்கெட்டில் இருந்த போனை இடது கையால் எடுக்க முடியாமல் திணறினான். செல் போன் தொடர்ந்து அலறிக்கொண்டே இருந்தது. ச்சே "இந்த சனியனை எவன்டா கண்டு பிடிச்சது" என்று நொந்துகொண்டு ரெண்டு இட்லியோடு முடித்துவிட்டு கையை கழுவிவிட்டு ஒரு வழியாக போனை ஆன் செய்தான். மறுமுனையில் மானேஜர் .

"சார் குட் மார்னிங் சார்..."

குட்மார்னிங் .என்ன மிஸ்டர் சிவா போன எடுக்க இவ்வளவு நேரமா ?
நைன் தர்டிக்கு மீட்டிங் மறந்துட்டிங்களா? எங்கே இருக்கீங்க ?

"சார் சாரி சார் ...கிளம்பிட்டேன் சார் . வித் இன் பிப்டீன் மினிட்ஸ் ஐ வில் பே தேர் சார்."

"கெட் பாஸ்ட்" . போனை கட் பண்ணினார் .

           அண்ணா நகரிலிருந்து திருவான்மியூருக்கு அரைமணி நேரத்திற்குள் செல்லும் முனைப்போடு சென்னை ட்ராபிக்கை கிழித்துக்கொண்டு பறந்தது அவனின் பல்சர்.

        சரியாக கிண்டி ரயில் நிலையத்தை கடந்தபோது , " அடடா அடடா அடை மழை டா ! அழகா சிரிச்சா அடை மழை டா! அவனின் நோக்கியா 6600 அலறியது. மானேஜர்தான் திட்ட போறாரு என்று நினைத்துக்கொண்டு  பைக்கை ஓரம்கட்டி விட்டு  அவசரஅவசரமாய் ஹெல்மெட்டை கழற்றினான். தொடர்ந்து  கத்திகொண்டே இருந்தது அவனின் நோக்கியா 6600  . இப்போது அவனுக்கு இந்த செல்போன் ,இந்த ரிங்க்டோன் மட்டுமில்லாமல் இந்த பாட்டில் நடித்த தமனாவின் மீதும் வெறுப்பு வரத்தொடங்கியது. டென்ஷனோடு செல்போனை ஆன் செய்து    பேசத்தொடங்கினான்.மறுமுனையில், "சார்,  ஐ.சி.ஐ.சி.ஐ லிருந்து கால் பன்றோம் " என்று வந்த குரலைக்கேட்டு கோபத்தின் உச்சத்திற்கே சென்றான். கட் செய்துவிட்டு பல்சரை விரட்டினான்.

             ஹலோ  ஜென்டில்மென், ப்ளீஸ் "புட் யுவர்  மொபைல் இன் சைலன்ஸ் மோட்"   என்று கூறவிட்டு ஏதோ ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தது அந்த 'புளு' கலர் கோட்டும் 'ரெட்' கலர் டையும். கொஞ்ச நேரம் கழித்து சிவாவின்  நோக்கியா 6600 அலறத்தொடங்கியது . சைலன்சில் போட்டிருந்த அவன் வைபிரேஷனை ஆப் செய்யாததால் சத்தம் ஏதுமின்றி அவன் தொடையை நெருடியது. மீட்டிங் நடுவில் போனை எடுக்க முடியாமல் அவஸ்தைப் பட்டான் . மீட்டிங் முடிவதிற்குள் இதுமாதிரி ஒன்பதுமுறை அவன் தொடை  நெருடப்பட்டது. ஒருவழியாய் மீட்டிங் முடிந்தது. செல்லை எடுத்து கோபத்துடன் பார்த்தான். அந்த ஒன்பது மிஸ்டு காலும் ப்ரியா என்று இருந்தது.ஒரு வித பயத்துடன்  ப்ரியாவிற்கு கால் செய்தான் .ஆனால் அவள் போனை எடுக்கவில்லை .தொடர்ந்து பண்ணிக்கொண்டே இருந்தான் .ஆறாவது அட்டம்ட்டில் வெற்றிபெற்றான். அவளிடம் கெஞ்ச ஆரம்பித்தான் 'சாரிமா' செல்லம் மீட்டிங்கில் இருந்தேன், அதான் எடுக்க முடியலை .அந்தப்பக்கம் அமைதியாகவே இருந்தது. மீண்டும்  கெஞ்ச ஆரம்பித்தான் .இருபத்திமூன்றாவது சாரிக்கு பின்  அவள்  சமாதானம் அடைந்தாள்.நாளை சந்திப்பதாக கூறிவிட்டு அலுவல் பணியில் மீண்டும் மூழ்க ஆரம்பித்தான்.

         மதியம் மூன்றுமணி.  " அடடா அடடா அடை மழை டா ! அழகா சிரிச்சா அடை மழை டா! " அவனின் நோக்கியா 6600 அலறியது .அய்யோ, ஒரு பத்து நிமிஷம் கூட விடமாற்றாங்களே. இந்த போனை  உடைச்சி எங்கேயாவது போடணும் என்று முனங்கிக்கொண்டே , போனை  எடுத்து ஆன் செய்தான் மறுமுனையில் ..சிவா சாருங்களா?
எஸ் ...
சார் ,"இந்த மாசம் லோன் டீவ் இன்னும் கட்டல " அந்த வங்கி பெண் கூற...
ஒகே மேடம் ஐ வில் கம் இந்தி ஈவினிங் ...சொல்லிவிட்டு சோர்வாய் அமர்ந்தான்.. எல்லா பணிகளையும் முடித்துவிட்டு  வீட்டுக்குள் நுழையும் போது மணி இரவு எட்டு .

                    வீட்டுக்குள் நுழைந்தவுடன் ...சாமி, எவனாவது கால் பண்ணி இம்சை கொடுக்கறதுக்குள்ள இந்த போனை சுவிட்ச் ஆப்  பண்ணிடனும் என்று நினைத்து போனை எடுக்கவும் அவனின் நோக்கியா 6600 அலறவும் சரியாய் இருந்தது .ச்சே, யாருடான்னு பயந்துக்கொண்டே போனை பார்த்தவன் நிம்மதியடைந்தான் .டிஸ்ப்ளேயில் அம்மா என்றிருந்தது .போனை ஆன் செய்து இவன் ஹலோன்னு சொல்லும் முன்பே அந்தப் பக்கம் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. "சிவா எப்படி பா இருக்க ? சாப்டியா பா ? 
ஆபிஸ்ல இருந்து வந்துட்டியா பா? "அம்மா பாசத்தை வாரி தெளித்துக்கொண்டிருக்கும் போதே  தங்கச்சி போனை பிடுங்கி பேச ஆரம்பித்தாள். "அண்ணா எப்படினா இருக்க? போன வாரம் வரேன்னு சொல்லிட்டு ஏனா  வரல?  உன் பிறந்தநாளுக்கு உனக்கு பிடிச்ச புளு கலர் ஜீன்ஸ் வாங்கி வச்சிருக்கோம் அண்ணா கண்டிப்பா வந்திடுனா". அண்ணா  பப்லு பேசறான் என்று சொல்லிவிட்டு பப்லுவிடம் போனை தந்தாள். அக்காவின் ஐந்து வயது குழந்தை தெத்தித் தெத்தி பேசியது ," மாமா சாப்டியா ? மாமா சைக்கிள் வாங்கினு வா மாமா". இந்தா அம்மாட்ட கொடுக்குறேன் .அக்கா பேச ஆரம்பித்தாள் "டேய் சிவா எப்படிடா இருக்க? உடம்பு சரியில்லைன்னு சொன்னியே இப்போ எப்படி டா இருக்கு. இந்த வாரம் ஒரு நாலஞ்சி நாள் லீவு போட்டுட்டு வாடா .நல்லா சாப்டுடா" .இந்தா அப்பாட்ட  பேசுனு சொல்லி அப்பாவிடம் கொடுத்தாள். அப்பா பேச ஆரம்பித்தார். "டேய்,சிவா எப்படிப்பா இருக்க ? வேலை எல்லாம் எப்படிடா இருக்கு. பணம் ஏதாவது வேணுமாடா ? உடம்ப பார்த்துக்கோப்பா . அப்புறம் உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கப் போறோம் ; லவ்வு கிவ்வு ஏதாவது இருந்தா சொல்லிடுடா முடிச்சி வச்சிடுறோம்" னு சொல்லி சிரிக்க ஆரம்பித்தார். இப்படியே சிரிப்பும் வனப்புமாய் அரைமணி நேரம் கழிந்தது . சரிப்பா நான் கண்டிப்பா அடுத்த வாரம் ஊருக்கு வருவேன்னு சொல்லிவிட்டு  போனை ஆப் செய்தான் சிவா . இப்போது  அவன் மனம் நிறைவாய் ஆனது . ஒரு நீண்ட புன்னகையுடன் கையில் பார்த்தான் ; அவனுடன் சேர்ந்து சிரித்தது அவனின் "நோக்கியா 6600"  .

No comments: